அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்                                                                                                                                                                                                                                                 DEMOLISH ALL REPRESSION
21.07..2010 தாயகக்குரல்
(2010-07-21 21:00:00)

அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே உடன்பாடு காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட சந்திப்பை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி தூதுக்குழு அரச பிரதிநிதிகளுடன்; சந்தித்துப் பேசியது. தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.

நிறைவேற்று அதிகாரம் உள்ள நாடாளுமன்றத்திற்கு பொறுப்பு கூறும் பிரதமர் பதவியை உருவாக்குவது குறித்து ஜனாதிபதிக்கும் ரணிலுக்கும் இடையே இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக  அமைச்சர் மைதிரிபால சிறிசேன பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்திருந்தார்.

தற்போதைய அரசியலமைப்பு திருத்த செயல்பாடுகளின்போது அரசியல் தீர்வு குறித்தும் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை, மற்றும் தேர்தல் சீர்திருத்தம் ஆகிவற்றில்தான் கவனம் செலுத்தப்படுவதாக தெரிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் திடமானதாக இருக்குமா என்பதில் கேள்வி எழுகிறது. குறிப்பாக இந்த சந்தேகம் எழக் காரணம் ரணில் விக்கிரமசிங்காவின் கடந்தகால நடவடிக்கைகளேயாகும்.

பொதுசன ஐக்கிய முன்னணி அரசு இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டத்தை வைத்து அதை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவை நாடியபோது ஐக்கிய தேசியக் கட்சி அந்தத் தீர்வுத்திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்து அதற்கு ஆதரவளிப்பதாக நம்பிக்கை அளித்திருந்தது. ஆனால் அந்த தீர்வுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் அரசு சமர்ப்பித்தபோது ஐக்கிய தேசியக் கட்சி அதை எதிர்த்து நிறைவேற்ற விடாமல் தடுத்தது. இனப்பிரச்சினை தொடர்பாக பலதடவைகள் ரணில் விக்கிரமசிங்காவின் பேச்சு ஒன்றாகவும் செயல் ஒன்றாகவும் இருந்துள்ளமை கடந்தகால அரசியல் வரலாறாகும்.

ஜனாதிபதிக்கும் எதிர்கட்சித் தலைவருக்கும் இடையில் இப்போது ஏற்பட்டுள்ள இணக்கப்பாடு தொடர்பாக பல கருத்துக்கள் வெளிவருகின்றன. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதாக  மக்களுக்கு வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இருதடவைகளுக்கு மேல் நீடிப்பது குறித்து திருத்தம் முன்வைத்தபோது அரசாங்கத்துக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியதாகவும் அதனாலேயே இப்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை உருவாக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளதாகவும் பேசப்படுகிறது.

நிறைவேற்று ஜனாதிபதிமுறைக்கு எதிர்ப்பு இருந்தது. ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இருதடவைக்கு மேல் நீடிப்பது குறித்த திருத்தத்திற்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்ததாலேயே நிறைவேற்று பிரதமர் முறை குறித்து ஆராயப்பட்டதாக அமைச்சர் மைதிரிபால சிறிசேன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மறுசீரமைப்பு என்ற ரீதியில் கட்சியின் தலைவர் ரணிலுக்கு எதிரான அலை ஒன்று உருவாகியுள்ளது. கட்சியில் சிலர் அரசாங்கத்திற்கு மாறலாம் என்ற நிலையும் தோன்றியுள்ளது. இந்த நெருக்கடிகளை சமாளிக்கவே ரணிலும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக  அரசுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைபுடனும் ஜே.வி.பியுடனும் பேச்சு நடத்தப் போவதாக அரசு தெரிவித்துள்ளது. இதை ஐ.தே.கட்சி எம.பி. ரவி கருணாநாயக்கவும் வலியுறுத்தியிருந்தார்.

இது குறித்து ஜே.வி.பி. விடுத்திருந்த அறிக்கையில், அரசியல் திருத்தங்கள் தொடர்பாக அரசு தமது யோசனைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். அதன்பின்னரே பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதா இல்லைளா என்பது தொடர்பாக தீர்மானிக்கமுடியும் எனத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக மக்களுக்கு உறுதியளித்த அரசாங்கம் இன்று பிரதமர் என்ற பெயரில் அதிகாரங்கள் அனைத்தையும் தனிநபரின் கைகளில் வழங்க முயற்சிப்பதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

இலங்கையில் அரசியலமைப்பில் திருத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினக்கு தீர்வுகாண இந்தியத் தலைவர்களுடனே பேச்சுநடத்திக் கொண்டிருக்கிறது. அண்மையில் இந்தியத் தலைவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து  தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அறிக்கை ஒன்றில் வடக்கு கிழக்கு இணைந்ததாகவே தீர்வு அமையவேண்டும் என இந்தியத் தலைவர்களிடம் கூறியதாக தெரிவித்திருந்தது.

இனப்பிரச்சினையில் கூட்டாக செயற்படுவதென தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளருமான ரீஸ் நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கை தொடர்பாக பேசும்போது வடக்கு கிழக்கை இணைப்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இறங்கியுள்ளதாகவும் அதனை இந்தியத் தலையீட்டினூடாக நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியதுடன் இதை அனுமதிக்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. ஒப்பந்தப்படி இரு மாகாணங்களின் இணைப்பு நிரந்தரமாக இருக்கவேண்டுமா இல்லையா என்பதை திர்மானிக்க கிழக்கு மாகாணத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்கவேண்டும். மாகாண சபை உருவான காலத்தில் சர்வசன வாக்கெடுப்பை நடத்தியிருந்தால் வடக்கு கிழக்கு நிரந்தர இணைப்புக்கு முஸ்லிம்கள் ஒருவேளை ஆதரவு அளித்திருக்கலாம். ஆனால் இப்போது கிழக்கில்  நிரந்தர இணைப்புக்கு ஆதரவு முஸ்லிம்களிடையே காணப்படவில்லை. கிழக்கில் மூவின மக்களும் விகிதாசாரத்தில் அதிகளவில் வித்தியாசம் காணப்படவில்லை. எனவே தற்போதைய சூழ்நிலையில் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா என்பது சந்தேகமே. எனவே வடக்கு கிழக்கு இணைப்பு என்பது இனப்பிரச்சினை தீர்வுக்கு தடையாக இருக்காமல் பார்க்கவேண்டியது தமிழ் தரப்பினரின் கடமையாகும்.

பண்டா செல்வா ஒப்பந்தத்தில் வடக்குக்கு ஒரு பிராந்திய சபையும் கிழக்கு மாகாணத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்திய சபைகள் அமைப்பதை தமிழ் அரசுக்கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

முந்திய தாயகக்குரல்கள்
அறிக்கைகள், பேட்டிகள்
-------------------------------------------------
-------------------------------------------------
-------------------------------------------------
-------------------------------------------------
-------------------------------------------------
-------------------------------------------------
வெளியீடுகள்
Test
-------------------------------------------------
பிற ஊடகங்களிலிருந்து...
-------------------------------------------------
-------------------------------------------------
-------------------------------------------------